அநீதியின் சுவடுகள் பழனிகுமார்
காமிரா கண்கள்

பழனிகுமார்

அநீதியின் சுவடுகள்

Staff Writer

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வியலைப் பற்றியும் தற்போதைய சமுதாயத்தில் அவர்களின் நிலை பற்றியும் புகைப்படங்கள் எடுத்து வருபவர், பழனிகுமார். 'நானும் ஒரு குழந்தை' என்ற தலைப்பில் தொடர்ந்து புகைப்படக் கண்காட்சியையும் நடத்தி வருகிறார்.'கக்கூஸ்' என்ற ஆவணத் திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றிய போதுதான் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு வந்திருக்கிறது.  2016ம் ஆண்டு முதல் தற்போதுவரை துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வை  தனது புகைப்படங்கள் மூலம் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார்.  " நவீன தொழில்நுட்பம் அதன் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியால் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணத்தைத் தடுக்க முடியவில்லை. 5 நாட்களுக்கு ஒரு துப்புரவுத் தொழிலாளி மரணமடைகிறான் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின்றன. நம்மால் உருவாக்கப்பட்ட சாக்கடையை சுத்தம் செய்ய குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்களை நாம் கொலை செய்கிறோம். ஏன் இவர்கள் மட்டும் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்?. இத்தொழிலில் ஈடுபடும் மக்களை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை?  என்ற பல கேள்விகள்தான் என்னைத் தொடர்ந்து இயக்குகின்றன. சமூக மாற்றம்தான் இவர்களின் நிலையை முன்னேற்றும் என்று நான் நம்புகிறேன்.  1972ம் ஆண்டு வியட்நாம் போரின்போது ஒருவர் எடுத்த புகைப்படம்  வியட்நாம் போரை   நிறுத்தியிருக்கிறது.  ஒரு புகைப்படக் கலைஞனால் சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதற்கு இந்த உதாரணம் போதாதா?  கல்லூரிகளில் எனது புகைப்படக் கண்காட்சியை நடத்தும்போது எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அதுவரை துப்புரவுத் தொழிலாளர்களை பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத மாணவர்கள், புகைப்படங்களைப் பார்த்ததும், என்னிடம் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். ஏன் இந்த வேலையை இவர்கள் செய்ய வேண்டும்?.  எப்படி இந்த வேலையை இவர்கள் செய்கிறார்கள்? இவர்களின் சம்பளம் எவ்வளவு? அரசு இவர்களுக்கு என்ன செய்திருக்கிறது? இப்படிப் பல கேள்விகள் கேட்டார்கள்.

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்விய்
துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வியலை
துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வியலை
துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வியலை

நான் எடுத்த புகைப்படங்களில் என்னை அதிகம் பாதித்தவை துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளின் புகைப்படங்கள்தான். அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவே  எனது புகைப்படங்கள் மூலம் அவர்களின் வாழ்வைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறேன்,'' என்கிற பழனிக்குமார் இப்போது பழங்குடி மக்களின் வாழ்வைப் புகைப்படங்களாக ஆவணப்படுத்திவருகிறார். இவை கறுப்பு வெள்ளைப் படங்களாக இந்த  பக்கத்தில் இடம் பெறுகின்றன. முன்பக்கத்தில் இருப்பவை துப்புரவுத் தொழிலாளர்களின் மரணத்தின்போதும் பணியின்போதும் எடுக்கப்பட்டவை.

ஜுன், 2019.